Monday, February 14, 2011

காவல்மரம் (அ) தலமரங்கள்

A sacred grove is a grove of trees of great religious importance to a particular culture. Sacred groves are most prominent in India.

 அரசு Peepal Tree  (Ficus religiosa) 
இன்றும் பல கிரமங்களில் அரச மரம்
காவல் மரமாக இருந்து வருகிறது

ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை தன் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மனித இனம் மரங்களையே நம்பியிருக்கிறது. தொடக்கத்தில் ஓடும் விலங்குகளை வேட்டையாட சிரமப்பட்ட மனித இனம், எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத மரத்திலிருந்து தன் உணவு, உடை, உறையுளை பெறமுடிந்தது. இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், மழை, நெருப்பு போன்றவற்றை பயத்தின் காரணமாக வழிபட்ட அவர்கள், அவற்றிலிருந்து தப்பிக்க மரத்தையே நாடினர். இந்த நன்றியுணர்வே பின் நாளில் மரத்தை வழிபட அவர்களைத் தூண்டியது. நாட்டு எல்லையில் நாட்டின் காவலாக, "காவல் மரங்களை" நட்டு, வளர்த்துப் பாதுகாத்து வந்தனர். காவல் மரங்கள் அரசனின் மானத்தின் குறியீடாக அமைந்திருந்தன. காவல் மரத்தின் சிறப்புகளைப் பல நூல்கள்  உரைக்கின்றன.
மனித இனத்திற்கு  சிந்தனையாற்றல் வளர்ந்தபின் மரத்திலே தெய்வம் வாழ்வதாய் எண்ணி வழிபாடு செய்தனர். பின்னர் மரத்தையே தெய்வமாக்கி வழிபட்டனர். உலகம் முழுவதும் "மர வழிபாடு" இருந்ததற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. பண்டைய பாரசீகம், எகிப்தில் பேரீச்சை மரங்களும், ஐரோப்பாவில் ஓக், ஆலிவ் மரங்களும், ஆப்பிரிக்காவில் பவோபாப் மரங்களும் வழிபடப்பட்டன.
சுற்றுசூழல் பாதுகாப்பில் தலமரங்கள்
பழம்பெருமை மிக்க இந்த தலமரங்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்புடன் உள்ளதால் நிலைத்து வாழ்கின்றன. இதன் பயனாய் பல பூச்சி, பறவை, விலங்கு இனங்களுக்கு உணவும், உறையுளும் கொடுத்து அவை காத்துவருகின்றன. பலவகைப் பறவைகள் தலமரங்களில் உள்ள கனிகளை உண்டு, அவற்றிலேயே கூடுகட்டி வாழ்கின்றன. குறிப்பாக காக்கை, அண்டங்காக்கை, மயில் முதலியவை தலமரங்களிலும் மாடப்புறா, மைனா, ஆந்தை கோயில் கோபுரங்களிலும் சிட்டுகுருவி, கிளி கோயில் தூண்களில் உள்ள இடுக்குகளிலும் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக எல்லோராலும் வெறுக்கப்படும் வெளவாலுக்கு கடைசி புகலிடம் கோயில் என்றால் அது மிகையில்லை. கோயில் பிரகாரங்களில் தொங்கும் இவ்விலங்குகளுக்கு பழங்களும், பூச்சிகளும், இளைப்பாற இடமும் தந்து தலமரங்கள் உதவுகின்றன.
தமிழக கோயில்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மர, செடி, கொடி, புல் வகைகள் தலமரமாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. கோயில் வளாகத்திற்கு வெளியே அழிந்துவிட்ட பல தாவர இனங்கள் கோயிலுக்குள் பாதுகாப்புடன் இருக்கக் காரணம் தலமர வழிபாடும் இதைச் சார்ந்த நம்பிக்கைகளும்தான். பல கோயில்களில் தலமரங்கள் சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன.
திருப்புல்லாணியில் உள்ள அரசமரத்தின் கிளைகள் வளைந்து தரைத்தொடுவதும், ஆழ்வார்திருநகரியில் புளியமரத்தின் இலைகள் இரவில் மூடாமல் இருப்பதும், அன்பில் ஆலந்துறையில் ஆலமரத்தில் விழுதுகள் இன்றி இருப்பதும், கொடுமுடியில் உள்ள வன்னிமரத்தின் ஒரு கிளையில் முட்கள் இருப்பதும், வேறு கிளையில் முட்கள் இல்லாமல் இருப்பதும் சில சிறப்பு பண்புகள். இயற்கையில் தோன்றும் பலவகை அற்புதங்களை தன்னகத்தே கொண்ட தலமரங்கள், தமிழக கோயில்களில் பாதுகாப்புடன் ஒன்றிரண்டு எஞ்சியுள்ளன.
இவற்றில் சில இனங்கள் அழியும் நிலையில் உள்ள பாதுகாக்க வேண்டிய தாவரங்களாகும். சில வகை தமிழகத்திலும் அதை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் திணைத் தாவரங்களாகும்.  தமிழக மக்களின் நம்பிக்கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவகைத் தாவர இனங்களை கோயில்களில் பாதுகாத்து வருகின்றன. இதற்குக் காரணம் பண்டைய தமிழனின் விவேகமும், அறிவியல் கலந்த ஆன்மிகக் கண்ணேட்டமும்தான்.


மா. குணசேகரன், ப. பாலசுப்பரமணியன்
(கட்டுரை ஆசிரியர்கள் இருவரும் கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  பணிபுரிபவர்கள்)




No comments:

Post a Comment